சித்திரச்சீட்டு கணிப்பாளருக்கான விதிமுறைகள்:-
1. மார்பளவு உயரம் கொண்ட மரம் அல்லது பிளாஸ்டிக் அல்லது கல் மேஜையில் சிவப்பு அல்லது பச்சை அல்லது நீல வர்ண வெல்வெட் அல்லது பட்டு துணியை விரித்து அதன்மேல் சித்திரச்சீட்டுகளை பரப்பி சித்திரச்சீட்டுகளை பலன் கேட்பவரை எடுக்க சொல்லவேண்டும். வெறும் தரையில் கண்டிப்பாக சித்திரச்சீட்டுகளை பரப்பக்கூடாது.
2. இடது கை வலது மூளையின் கட்டுபாட்டில் இருப்பது, உணர்வுகள், உணர்ச்சிகள், மற்றும் உள்ளுணர்வு போன்ற விஷயங்களை கையாள்வது வலது மூளைதான் எனவே பரப்பி வைத்த சித்திரச்சீட்டுகளிலிருந்து பலன்களுக்கான சித்திரச்சீட்டுகளை எடுக்கும் போது இடது கையால்தான் எடுக்க வேண்டும்.
3. பலன்களுக்கான சித்திரச்சீட்டுகளை எடுக்கும் போது நீங்கள் எந்த கேள்விக்கு விடை தேடுகிறீர்களோ அந்த கேள்வியை மனதில் இருத்திக்கொண்டு சித்திரச்சீட்டுகளை எடுப்பது இன்றியமையாதது. அப்போதுதான் உங்கள் கேள்விக்கு சரியான பதில் சித்திரச்சீட்டிலிருந்து கிடைக்கும்.
4. சித்திரச்சீட்டுகளை சுத்தமான இடத்தில் மட்டுமே வைக்கவேண்டும். பிறர் கைகளில் கொடுக்கக் கூடாது. சித்திரச் சீட்டுகளுக்கும் நமக்கும் ஒரு இணக்கம் இருப்பது இன்றியமையாதது.
5. பலன் கூறும் போது கால்களை குறுக்காக வைத்து அமரக் கூடாது.
6. கோபம், அதிக மனசோர்வு, வெறுப்பு உள்ள நேரங்களில் கண்டிப்பாக சித்திரச்சீட்டு பலன் பார்க்கக் கூடாது. தேவையற்ற எதிர் விளைவுகளை தவிர்க்க இது உதவும்.
7. மனதில் சலனம் ஏற்படுத்தும் நாட்களில் சித்திரச்சீட்டுகளை எடுப்பதை தவிர்க்கவும். மனதில் சலனம் உள்ள நேரங்களில் சித்திரச்சீட்டுகளை எடுக்கக் கூடாது. சரியான பலனை அந்த நேரத்தில் நம்மால் பார்க்க இயலாது.
8. பலன் கேட்பவருக்கு ஒரு நண்பனாக, ஆலோசகராக, குருவாக, நல்ல வழிகாட்டியாக நம்மை உணர வேண்டும்.
9. இந்த சித்திரச் சீட்டுகளை பார்த்து பலன் சொல்லும் போது பிரபஞ்சம், அல்லது இறைவன், அல்லது வாழ்வு, வந்திருப்பவருக்கு சொல்லவேண்டிய விஷயத்தை நம் மூலம் பலனாக சொல்வதாகவும், நாம் வெறும் கருவி மட்டுமே என்பதையும் உணர வேண்டியது அவசியம்.
10. ஒவ்வொரு முறையும் சித்திரச்சீட்டுகளை பார்த்து பலன் சொல்ல துவங்கும் முன் ஒரு ஜந்து நிமிடம் தியானம் செய்து மனதை காலியாக்கிகொள்ளுதல் அவசியம்.